மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

செய்யூர்: அரியனூர் ஊராட்சியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் பணி, முடிந்ததாக கல்வெட்டு வைக்கப்பட்டள்ளது அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசித்து வருகின்றனர். விடுமுறை காலங்களில் இவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானம் இல்லாததால் அப்பகுதியில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர அரசின் உத்தரவின்பேரில் அதிகாரிகளிடம் முடிவு செய்தனர்.

அதன்படி, அதிகாரிகள் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தர முடிவு செய்தனர். அதன்பின், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 20 சென்ட் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால், இந்த மைதானம் அமைக்கும் இப்பணி துவங்குவதற்கு முன் அப்பகுதி இளைஞர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து இந்த மைதானம் சுமார் ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது. ஏரி நீர் பிடிப்பு பகுதி என்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும். மேலும், ஆதிதிராவிடர் சுடுகாட்டு இடம் என்பதால், அங்கு மைதானம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியது.

பின்னர், மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பொதுமக்கள் மைதானத்தை கிராமத்தின் அருகிலேயே அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை. இதனிடையே, மைதானம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரரால் மைதானம் அமைக்கும் பணி முடிந்ததாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்  ஊராட்சியில் ஏரியில் அமைக்கப்படும் விளையாட்டு மைதானம் இளைஞர்கள், மாணவர்கள் அதிருப்தி என கடந்த ஆண்டு ஆக. 21ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதேபோன்று, கடந்த ஆண்டு நிவர் புயல் காரணமாக பலத்த மழை  அப்பகுதியில் பெய்தது. அப்போது, விளையாட்டு மைதானம் அமைக்க இருந்த இடம் மழையால் நீரில் மூழ்கியது. தற்போது கடந்த ஐந்து மாதங்களாக இடம்  நீரில் மூழ்கி காணப்படுகிறது.

* நடக்காத பணி முடிந்தது எப்படி

இந்த ஊராட்சியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி ஆகஸ்ட்டில் தொடங்கியது. அப்போது, இளைஞர்கள் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்டது. பின்னர், தினகரன் நாளிதழ் செய்திக்கு பின் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனிடையே, விளையாட்டு மைதானம் அமைக்கும் ஒப்பந்ததாரர்  கிரிக்கெட் மைதானம் ரூ.12 ஆயிரம் மதிப்பில் ஜனவரியிலும், கபடி மைதானம் ரூ.22,500 மதிப்பீட்டிலும், கைப்பந்து மைதானம், ரூ.26 ஆயிரம் மதிப்பில் ஜூன் மாதமும் பணிகள் முடிந்ததாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைபோல் பணி தொடங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்ட பணி யாருக்கும் தெரியாமல் எப்படி முடிவடைந்தது. இந்த கல்வெட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி ஒப்பந்ததாரரால் வைக்கப்பட்டது. நடக்காத பணி நடந்து முடிந்ததாக கல்வெட்டு வைத்தவர்கள் மீதும், கிராமத்திற்கு அருகில் மைதானம் அமைக்கவும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>