திறந்த ஒரு மாதத்தில் தடுப்பணை இடிந்து விழுந்த விவகாரம்: முதல்வரின் உறவினர்களை காப்பாற்ற அதிகாரிகளை பலிகடா ஆக்குவதா? அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தடுப்பணை இடிந்து விழுந்த விவகாரத்தில், முதல்வர் பழனிசாமியின் உறவினர்களை காப்பாற்ற அதிகாரிகளை பலிகடா ஆக்குவதா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதம்: ஊர் ஊராகப் பிரசாரம் செய்யும் முதல்வர் பழனிசாமி, கிராம சபைக் கூட்டம் என்றால் மட்டும் கொரோனாவைக் காரணம் காட்டி தடை போடுகிறார். மக்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாதே, அவர்களுடைய பாதையே ஒருவழிப் பாதைதானே. இதில், மு.க.ஸ்டாலின் துண்டுச் சீட்டு இல்லாமல் என்னுடன் நேருக்கு நேர் வாதிட முடியுமா என சவடால் விடுகிறார். என் கையில் இருப்பது துண்டுச் சீட்டல்ல. இந்த ஆட்சியின் அவலட்சணங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் துருப்புச் சீட்டு. இது பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம் ஆற்றில் பழனிசாமி ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து விழுந்து வினோத்குமார் என்ற இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே, 25 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தளவனூர் தடுப்பணை கடந்த டிசம்பர் 20ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஒரு மாத கால அளவிலேயே தகர்ந்து விழுந்திருக்கிறது. முதல்வர் பழனிசாமியின் சம்பந்திக்கு டெண்டர் தரப்பட்டு கட்டப்பட்ட தடுப்பணை இது. அரசு கஜானா பணத்தை தனது உறவினர்களுக்கு, பினாமிகளுக்கு டெண்டர் என்ற பெயரில் அள்ளிக்கொடுத்து, தரமற்ற முறையில் தடுப்பணை கட்டி, மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்து ஊழல் செய்யும் பழனிசாமி ஆட்சியின் சீர்கேடுகளை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இத்தகைய தடுப்பணைகள்.உண்மை வெள்ளமாகப் பெருகும் போது, ஊழல் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்து தான் விழும். அதை மறைக்க முடியாது என்பதால், தடுப்பணை இடிந்து விழுந்ததற்காக, சில அதிகாரிகள் மீது ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கை எடுத்து, கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது பழனிசாமி அரசு. பணம் சம்பாதிக்க பழனிசாமியின் சொந்தங்கள் பலிகடாக்கள் அதிகாரிகளா?

பழனிசாமி போலவே அவருடைய அமைச்சரவையில் உள்ள அதிமோதவிகளும் பேசுகிறார்கள். என் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவாரா என ஆளாளுக்கு கேட்கிறார்கள். கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களில் ஒருவனான நான் எப்போதும் போல எனக்கான தொகுதியில் போட்டியிடுவேன். ஆனாலும், 234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாக நினைத்து அல்ல, தலைவர் கலைஞர் போட்டியிடுவதாக நினைத்துப் பணியாற்றுவேன். அதிமுக  அமைச்சர்களில் ஒருவர்கூட வெற்றி பெற முடியாதபடி மக்களின் தீர்ப்பு இருக்கும்.  நம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்புக்குத் தலைவணங்கி, அவர்களின் குறைகளைக் களைவது தான் நமது முதல் நோக்கம். அதைத் தான், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தின் வாயிலில் நின்று நேற்றைய தினம் பிரகடனமாக அறிவித்தேன். திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்கள், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என ஒவ்வொரு நிகழ்விலும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வந்து மனுக்களை அளிக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சி தான், நேற்று அறிவிக்கப்பட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற மக்களின் குறை தீர்க்கும் முன்னெடுப்பும் அறிவிக்கப்பட்டது. இதற்கென தனித்துறை உருவாக்கப்படும் என்ற உறுதியினை உங்களில் ஒருவனான நான் வழங்கியிருக்கிறேன். மக்களின் மனுக்களை நேரில் பெறுவதற்காக 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனவரி 29 முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறேன். திமுகவின் உறுதிமொழியினைத் துண்டறிக்கைகள் வாயிலாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது திமுகவினரின் கடமை.  மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுக வெற்றியைக் குறுக்கு வழியில் தடுத்திட நினைக்கும் குள்ளநரிக் கூட்ட ஆட்சியாளர்களின் சதிவலைகளை அறுத்தெறிந்திட வேண்டும். எப்போதும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை உங்களில் ஒருவனான நான், ஒவ்வொரு திமுகவினரிடமும் எதிர்பார்க்கிறேன்.

திமுக அரசு நிறைவேற்றவுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தேர்தல் களத்தில் நூற்றுக்கு நூறு சதவீத அளவிலான வெற்றியாக அமையும். ‘மிஷன் 200’ என்கிற இலக்கையும் தாண்டும். வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: