தண்ணீரில் மூழ்கிய பயிர்களை இயந்திரம் பற்றாக்குறையால் அறுவடை செய்ய முடியவில்லை-வேதனையில் விவசாயிகள்

காரைக்குடி :  அறுவடை இயந்திரம் கிடைக்காததால், தண்ணீரில் மூழ்கி கிடக்கும் பயிர்களை அறுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் புலம்பி வருகின்றனர். காரைக்குடி தாலுக்கா சாக்கோட்டை யூனியன், கல்லல் யூனியன் பகுதிகளில் 8,423 எக்டேருக்கு மேல் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதில் சாக்கோட்டை யூனியனில்  4,200 எக்டேரிலும், கல்லல் யூனியன் பகுதியில் 4,023 எக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இரண்டு யூனியன் பகுதியில் உள்ள 908 கண்மாய்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறைந்துள்ளன.

இப்பகுதியை பொருத்தவரை டீலக்ஸ், ஜெஜிஎல், டிகேஎம், கல்சர் உள்பட பல்வேறு ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக இரண்டு யூனியன் பகுதிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. பல்வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் முளைத்து காணப்படுகிறது.

தவிர தண்ணீரில் கீழே சாயாத பயிர்களும் முளைத்து பயனற்று போய் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக வெயில் அடித்து வரும் நிலையில் அறுவடை செய்ய இயந்திரம் கிடைக்காததால் மூழ்கிய பயிர்களை கூட அறுக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் வறட்சியால் போதிய விளைச்சல் இருக்காது.

 இந்த ஆண்டு அதிக மழையால் விளைந்தும் பயனற்று போய் விட்டது. விவசாயத்திற்கு ஆள் கிடைக்காத நிலை உள்ளது. தவிர வயல்களில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் பயிர்களை அறுக்க முடியாது. இயந்திரத்தை கொண்டு தான் அறுக்க முடியும். தண்ணீரில் மூழ்கிகிடக்கும் பயிர்களை அறுத்து காயப்போட்டால்தான் ஏதோ ஓரளவுக்காவது விற்பனை செய்ய முடியும் என நினைத்தோம்.

ஆனால் இயந்திரம் பற்றக்குறை காரணமாக உடனடியாக அறுக்க முடியாமல் பல நாட்களாக காத்துக்கிடக்கிறோம். தொடர்ந்து ஈரத்திலேயே கிடந்தால் முற்றிலும் பயன் இல்லாமல் போய்விடும். இயந்திர பற்றாக்குறையால் இருப்பதை கூட காப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: