நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்-சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருப்பூர் :  திருப்பூர் நொய்யல் ஆற்றில் கோழி, இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால், ஆறு மாசுபடுவதோடு, நகரின் சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூரில் கோழி மற்றும் இறைச்சிக்கடைகள் ஏராளமாக உள்ளன. இறைச்சி கடைகள் மற்றும் கோழிக்கடைகளின் கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல், நகரின் மத்தியில் ஓடும் நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. கழிவுகளை மூட்டையாக கட்டி வீசப்படுகிறது. அதிலும், அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் பகுதியில் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன.

நகருக்குள் இருக்கும் இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆடு, மாடு ஆகியவை நகராட்சி வதைக்கூடங்களில் அறுக்கப்பட்டு, “சீல்’ பெற வேண்டும். அவற்றையே விற்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால், கடைகளிலேயே அறுக்கப்பட்டு, கழிவுகள் முறைகேடாக நொய்யல் ஆறு, ஓடைகள், பொது இடங்கள், ரோடுகளில் கொட்டப்படுகின்றன. இதனால், நீர் நிலைகள் மாசடைவதோடு, கடும் துர்நாற்றம், தொற்றுநோய் பரவுதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த நகரின் சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது.    

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சுகாதாரதுறை அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், இறைச்சிக் கடைக்காரர்கள், கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி நொய்யல் ஆற்றில் கொட்டி செல்கின்றனர். இதனால் ஆறு மாசுபடுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள் இறைச்சிக் கடைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: