பெரியபாளையம் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் காவல் நிலையத்தில் துருபிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்களை ஏலம்விட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் காவல்  நிலையத்தின்  கட்டுப்பாட்டில் 70 கிராமங்கள் உள்ளன. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார்   பணியாற்றி வருகின்றனர். குடித்து வாகனம் ஓட்டுபவர்கள், மணல் கடத்தல்,  செம்மரம் கடத்தல்,  ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவைகளுக்கு  பயன்படுத்திய கார், பைக், வேன், லாரி ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்கள்  என நூற்றுக்கணக்கான வாகனங்கள் பெரியபாளையம்  காவல் நிலைய வளாகத்திலும், காவலர் குடியிருப்பு அருகிலும்   பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், அதிக அளவு பைக்குகளே உள்ளன. இந்த வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து எதற்குமே உதவாமல் துருபிடித்து காயலான் கடைக்கு செல்லும் அளவுக்கு உருக்குலைந்து கிடக்கின்றன.

மணல் கடத்தலில் பறிமுதல் செய்த லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள், டிராக்டர், மாட்டு வண்டி பல மாதங்களாக மக்கி மண்ணோடு மண்ணாகி வருகிறது.  எனவே, இந்த வாகனங்களை  ஏலம் விட வேண்டும். வாகனங்கள் மீது உள்ள வழக்குகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>