2 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை; புதுச்சேரியில் வலுவான இயக்கமாக காங்கிரஸ் உள்ளது: முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: 2 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை; புதுச்சேரியில் வலுவான இயக்கமாக காங்கிரஸ் உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் நமச்சிவாயம். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து பணியாற்றியவர். இந்நிலையில், அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே நேற்று மாலை மாநில, மாவட்ட, வட்டார அளவில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார்.

அப்போது இன்று அவர் தனது அமைச்சர், எம்எல்ஏ, கட்சி பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். இதற்கிடையில் இன்று மதியம் காங்கிரஸ் மாநில தலைவர் ஏவிசுப்பிரமணியன் காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;  அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; நமச்சிவாயம் ராஜினாமா தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி பதவிகளை அனுபவித்துவிட்டு, தற்போது தேர்தல் வரும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார். எந்த அமைச்சரின் துறையிலும் நான் தலையிடுவது இல்லை. எந்த அமைச்சரின் துறையில் நான் தலையிட்டேன் என்று ஆதாரத்துடன் கூற வேண்டும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய என்னிடம் கடிதம் தரவேண்டும் ஆனால் அமைச்சர் நமச்சிவாயத்தின் ராஜினாமா கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை. 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

காங்கிரஸ் கட்சியை விட்டு யார் பிரிந்தாலும் புதுச்சேரியில் வலுவான இயக்கமாக காங்கிரஸ் உள்ளது. புதுச்சேரியோ, தமிழகமோ பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் செயல்பட்டேன். ராஜினாமா செய்தவர்களின் சரித்திரம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும் தேர்தல் நெருங்கும் போது இதுபோன்று நடக்கும்; அதையும் சமாளித்து தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என கூறினார்.

Related Stories: