விடுமுறையால் அணிவகுத்த வாகனங்கள் கப்பலூர் டோல்கேட்டில் கடும் நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி

திருமங்கலம் : ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை கப்பலூர் டோல்கேட்டில் ஏற்பட்ட கடும் நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது முதல் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக விடுமுறை தினங்களில் அதிகளவில் வரும் வாகனங்கள் டோல்கேட்டினை கடப்பதில் ஏற்படும் சிரமத்தினால் பஸ்கள், லாரிகள், கார்கள் என அனைத்தும் டோல்கேட்டில் நீண்டநேரம் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி வருகிறது. முகூர்த்த நாள் என்பதால் நேற்று மாலை முதல் அதிகளவில் வாகன போக்குவரத்து இருந்தது. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மாலை கப்பலூர் டோல்கேட்டினை கடந்து செல்ல தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றன.

அதேபோல் மதுரைநோக்கியும் ஏராளமான வாகனங்கள் வந்தன. ஒரே நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்ததால் டோல்கேட்டில் கடும் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் இரண்டு புறமும் வரிசையாக நின்றன. இதனால் கப்பலூர் மேம்பாலம் வரையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

 பாஸ்டேக் முறையால் குளறுபடி ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் டோல்கேட்டில் வாகனங்களை விரைவில் கடந்து செல்ல உதவினர். மாலையில் ஏற்பட்ட நெரிசல் தீர சுமார் அரைமணிநேரம் ஆனது.

இதே போல் பொங்கல் கொண்டாட்டங்கள் முடித்து வடமாவட்டங்கள் சென்ற வாகனங்களால் கப்பலூர் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் சமீபத்தில் நின்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: