விழுப்புரம் கோட்ட அரசு பஸ் டெப்போக்களில் பயனற்று கிடக்கும் டிக்கெட் மெஷின்கள்: மீண்டும் கிழித்து வழங்கும் அவலம்

திருவள்ளூர்: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் மெஷின்கள் போதிய தரம் இல்லாததால், அவை பயனற்று டெப்போக்களில் கிடக்கின்றன. இதனால், மீண்டும் பழைய முறைப்படி டிக்கெட் பண்டல்கள் மூலம் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிழித்து வழங்கப்படுகிறது. விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் பணியாற்றும் கண்டக்டர்களின் பணியை எளிதாக்கவும், டிக்கெட் வசூலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், அரசின் நிதியுதவியுடன், கடந்த, 2016ம் ஆண்டு ஜனவரி வரை 1,200 கையடக்க டிக்கெட் மெஷின்கள் வழங்கப்பட்டன.

தற்போது இந்த மெஷின்கள் அனைத்தும் பழுதாகி விட்டன. இதை, பராமரிப்பு பணி மேற்கொண்டு வந்த நிலையில், பராமரிப்பு என்பது சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால், அவை குப்பைக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டர்கள் கூறுகையில், “விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட டிக்கெட் மெஷின்கள் போதிய தரம் இல்லை. மெஷின் வழங்கப்பட்ட நிலையில், 6 மாதம் சிறப்பாக வேலை செய்தது. அதன் பின்னர் அவை மக்கர் செய்யத் துவங்கிவிட்டது. அவற்றை சர்வீசுக்கு வழங்கினால், பழுது நீக்கப்பட்டு உடனடியாக கிடைப்பதில்லை. இதனால், திருவள்ளூர் உட்பட சில மாவட்டங்களில் போக்குவரத்துக்கழக கிளைகளில் சர்வீஸ் செய்ய முடியாத மெஷின்கள், அப்படியே ஓரம் கட்டப்பட்டு உள்ளன. இதனால், டிக்கெட் பண்டல்களை கையில் வைத்துக்கொண்டு, பழையபடி கிழித்துக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

Related Stories:

>