சசிகலா விவகாரத்தில் அதிமுக விரைவில் நல்ல நிலைப்பாடு எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை..!!

சென்னை: சசிகலா விவகாரத்தில் அதிமுக விரைவில் நல்ல நிலைப்பாடு எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. சட்டசபை தேர்தலிலும் கூட்டணியில் நீடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் இருந்தார். ஆனால் மக்கள் இந்த கூட்டணியை ஏற்கவில்லை. சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக்கூறுவது வருத்தம் அளிக்கிறது. சசிகலாவினால் அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள். யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தான் பேச்சுவார்த்தை எனக் கூறுவது தாமதத்திற்கு வழிவகுத்துவிடும் எனவும் கூறினார்.

அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் சசிகலாவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், கூட்டணி கட்சியான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவரால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்களே தற்போது எதிர்ப்பது வருத்தமாக உள்ளது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Related Stories:

>