வெளிநாடுகளில் உள்ளது போல் இரவிலும் கண்டுகளிக்கும் வகையில் அமிர்தியில் ஒளிரும் மிருக காட்சி அமைப்பது எப்போது?: அமைச்சர் அறிவித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை

வேலூர்: வெளிநாடுகளில் உள்ளது போல் இரவிலும் வனவிலங்குகளை கண்டுகளிக்கும் வகையில் அமிர்தியில் ஒளிரும் மிருக காட்சி அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்து ஓராண்டு ஆகியும் இன்னும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எழில் கொஞ்சும் அழகான நந்தவனத்துக்கு நடுவே அமைதியான சூழலுடன் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது, வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்கா. ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டுவரும் இந்தப் பூங்காவில் 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ளது. பூங்காவில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும் காணப்படுகிறது.

அமிர்தி வனத்தின் பாதி பரப்பளவு வனவிலங்கு சரணாலயத்திற்கும் மறு பாதி சுற்றுலாத் தலமாகவும் பிரித்துப் பராமரிக்கப்படுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையேற்றம் ஒரு அழகான நீர்வீழ்ச்சியை முழுமையாகப் பார்வையிட வழிவகுக்கிறது. நீர்வீழ்ச்சியில் பருவமழை காலங்களில் நீரின் வீழ்ச்சி அதிகமாக இருக்கும்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை விடுமுறை நாள்களில் மட்டும் அதிகமாக உள்ளது. இவ்வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள்,காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள்,முயல்கள், மலைப்பாம்புகள் முதலியன வாழ்கின்றன.சிறப்பு வாய்ந்த இந்த அமிர்தி உயிரியல் பூங்காவில் பல்வேறு கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 2018-19ம் ஆண்டில் ₹12 கோடியில் முதலைகள் பாதுகாக்க முதலை பண்ணை அமைக்கப்படும் பணி முடிந்துள்ளது. பொது மக்கள் அமர்ந்து உணவு உண்ண ₹10 லட்சத்தில் சிற்றூண்டி மையம் அமைக்கப்பட்ட உள்ளது.

அமிர்தி வன சிறு மிருககாட்சி சாலை 1 கோடி விரிவாக்க பணிக்காக ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குள் இவற்றை மேம்படுத்த 10 திட்டம் வகுக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் வெறும் வார்த்தைகளில் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு உலக வனநாளையொட்டி நடந்த நிகழ்ச்சி யில் அமிர்தியின் சிறப்புகள் குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, வெளிநாடுகள் காடுகள், மிருககாட்சிகள் இருப்பதை போல தமிழகத்திலும் கொண்டுவர நானும் துறை முதன்மை செயலாளரும் வெளிநாட்டிற்கு 13 நாட்கள் சென்றோம்.அங்கு காடுகளில் மிருகங்கள் எப்படி இருக்கிறது? இரவிலும் மிருககாட்சியை பார்க்க என்னவழி என அறிந்து வந்தோம். இரவில் வனப்பகுதிக்குள் சவாரி செய்து வனவிலங்குகளை காணும் திட்டம் தமிழகத்தில் விரைவில் நடைமுறை படுத்தப்படும்.

முதலில் இங்குள்ள அமிர்தி வனப்பகுதியில் செயல்படுத்தப்படும். இங்கு 175 ஊர்வனங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார். ஆனால் அவரின் அறிவிப்பு வெறும் பெயர் அளவில் மட்டுமே உள்ளது. இன்னும் செயல்வடிவத்துக்கு இன்னும் கொண்டுவரவில்லை.இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:அமிர்தி வனப்பூங்காவை மேம்படுத்த மத்திய சுற்றுலா ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. பணிகள் நிறைவடைந்தால், யானைகளுக்கான புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படும். 15 முதல் 20 முதலைகளை வளர்க்க ₹1 கோடியில், முதலைப் பண்ணை மற்றும் உணவகம் அமைக்கும் பணிகளும் நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமிர்தியில் வன உயிரினங்களுக்குத் தேவையான சீதோஷ்ண நிலையை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக வெளிர்மான், கடமான், நீர்வாழ் பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை படிப்படியாக கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றங்கள் குறித்து அறிக்கை தயாரிக்க, கோவையைச் சேர்ந்த முதுகெலும்பற்ற உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பான அறிக்கையும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசிடமிருந்து இதுவரை நிதி வரவில்லை. மேலும் அமைச்சர் தெரிவித்தப்படி இரவிலும் ஓளிரும் வகையில் மிருககாட்சி இன்னும் அமைக்க திட்ட அறிக்கை கூட தயாரிக்கவில்லை. சுற்றுலா பயணிகளின் கவரும் வகையில் செயல்படுத்தினால் அனைவரின் திசையும் வேலூர் அமிர்தி பக்கம் திரும்பும். அதற்கு தமிழக அரசு தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: