இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியது: சொந்த ஊரில் நடராஜனுக்கு இன்று மாலை பிரமாண்ட வரவேற்பு

சேலம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்தொடரை 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி, சிட்னியில் இருந்து இன்றுஅதிகாலை நாடு திரும்பியது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். யார்க்கர் மூலம் டிவில்லியர்ஸ் உள்பட முன்னணி வீரர்களை திணறடித்து விக்கெட் எடுத்த நடராஜன், ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் வலை பயிற்சி வீரராக இடம் பெற்றார். ஆனால் வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் ஒருநாள், டி.20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார்.

கிராமத்தில் இருந்து சென்று சாதனை படைத்த நடராஜனுக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடராஜன், இன்று தனது சொந்த ஊரான  சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். கடந்த நவம்பர் 6ம் தேதி நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. 3 மாதங்கள் ஆகியும் குழந்தையை பார்க்காமல் நாட்டிற்காக நடராஜன் ஆடி வந்தார். முதன்முதலாக தனது குழந்தையை காணும் ஆவலில் நடராஜன் உள்ளார். நடராஜனுக்கு அவரது கிரிக்கெட் அகாடமி, நடராஜனின் குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் ஸ்டாப் சந்தைப்பேட்டையில் இருந்து, அவரது வீடுவரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம், சிறியதாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மட்டுமே சொந்த ஊரில் இருக்கும் நடராஜன், தமிழக அணிக்காக முஷ்டாக் அலி டிராபியில் ஆடுவதற்காக சென்னை செல்கிறார்.

மிக்க மகிழ்ச்சி; பன்ட் நெகிழ்ச்சி

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் 89 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற ரிஷப் பன்ட் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இன்று டெல்லி விமானநிலையம் திரும்பிய அவர் கூறுகையில், ``நாங்கள் கோப்பையை தக்கவைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் தொடரில் விளையாடிய விதத்தில் முழு அணியும் மிகவும் மகிழ்ச்சியடைகிறது’’ என்றார்.

Related Stories: