இங்கே கிடையாது, அடுத்த மாவட்டம் போங்க...! மின்கட்டணம் செலுத்த எல்லை தாண்டும் மக்கள்: உக்கிரன்கோட்டையில் தொடரும் அவலம்

மானூர்: மின்கட்டணம் செலுத்துவதற்கான அலுவலகம் உள்ளூரிலேயே இல்லாததால்  உக்கிரன்கோட்டை ஊராட்சி மக்கள், அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் அவலம்  தொடர்கிறது. நெல்லை மாவட்டம், மானூர் தாலுகாவுக்குட்பட்ட  உக்கிரன்கோட்டை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  உள்ளன. இது 5 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாகும். உக்கிரன்கோட்டையில்  விவசாயமே பிரதான தொழிலாகும். சிற்றாற்றுப் பாசனம் 20 சதவீதமும், மீதமுள்ள 80  சதவீதம் வானம் பார்த்த மானாவாரி விளைநிலங்களும் என்பதால்  கிணற்று நீரைப்  பயன்படுத்தி மின்மோட்டார் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அனைத்து  விவசாயப் பணிகளும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மின்சாரத்தை நம்பி உள்ளன.

இங்கு 36 படுக்கைகள் கொண்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு தினமும் சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.  மேலும் மேல்நிலைப்பள்ளி, வங்கிகள்,  தபால் நிலையங்கள் போன்ற அலுவலகங்களும் உள்ளன. இருப்பினும்  உக்கிரன்கோட்டை கிராமத்தின் மின் விநியோகப்பணி தென்காசி மாவட்டத்தின்  கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமை மின் பராமரிப்பு அலுவலகம் ஆலங்குளத்திலும்,  உதவி மின் பொறியாளர் அலுவலகம்  ஆலங்குளம்  தாலுகா வெங்கடேஸ்வரபுரத்திலும்  இயங்கி வருகின்றன. உக்கிரன்கோட்டையில் பணிபுரியும் மின் ஊழியர்கள்  ஆலங்குளத்தைச் சுற்றியுள்ள நெட்டூர் போன்ற பல்வேறு கிராமங்களில்  குடியிருந்து உக்கிரன்கோட்டை மின் விநியோக பாரமரிப்பு பணியை கவனித்து  வருகின்றனர். இதனால் பராமரிப்பு பணி தாமதமாவதோடு அசம்பாவித நேரங்களில் மின்  ஊழியர்கள் வந்து சேர காலதாமதம் ஆகிறது. இதனால் விவசாயிகளும் மின்சாரத்தை  பயன்படுத்தும் அலுவலகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையமும் பெரும்  இன்னல்களை சந்திக்கின்றனர்.

 குறிப்பாக கடந்த அக்.9ம்  தேதி உக்கிரன்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டையனூரில் இருந்த மின்மாற்றி  திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை சரிசெய்யவேண்டிய மின்வாரிய  ஊழியர்கள் அவ்விடத்தில் இல்லை என்ற போதும் உஷாரான கிராம மக்கள் மேற்கொண்ட  தடுப்பு நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தனியார் ஒருவர்  மூலம் மின்சாரம் நிறுத்தப்பட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள மின்  ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இக்கிராமத்தில்  அதிகளவில் உள்ள விவசாயிகள், மின்கட்டணத்தை செலுத்த தென்காசி  மாவட்டத்திலுள்ள வெங்கடேஸ்வரபுரம் அலுவலகத்திற்கு செல்லும் அவலம்  தொடர்கிறது. அத்துடன் புதிய மின் இணைப்பு பெறவும் வெங்டேஸ்வரபுரத்திலுள்ள  உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை நாடினாலும் ஒரு சில பதிவேடுகள் சரி செய்ய  ஆலங்குளம் தலைமை அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு சரியான  போக்குவரத்து இல்லாததால் பணவிரயம், நேர விரயம் ஆவதோடு சிறிய வேலைக்குகூட  ஒரு சில நாட்கள் அலைந்து திரிய வேண்டியிருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும்  இக்கிராமத்தினர் போக்குவரத்தும்  மற்றும் ஏனைய பணிகளும் நெல்லையை  சார்ந்திருப்பதால் மின்சார பணிக்கென பிரத்யேகமாக தென்காசி மாவட்டம் சென்று  வர  வேண்டிய அவலம் தொடர்கிறது. இதனால் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு  தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.   எனவே உக்கிரன்கோட்டை  கிராமத்தின் மின் விநியோகப் பணிகளை நெல்லை மாவட்டத்திற்கு மாற்றி  அமைக்கவும், இது பெரிய கிராமம் என்பதால் மின்சார கட்டணம் கட்டுவதற்கு  இக்கிராமத்திலேயே அலுவலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: