கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள நில ஆக்கிரமிப்பு தடை சட்டம் செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் நோக்கத்தில் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது நியாயமானது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பு, வர்த்தக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அரசிடம் கொடுத்த அறிக்கையில், அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.  ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதுடன் ஆக்கிரமிப்பாளர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு சிபாரிசுகள் செய்திருந்தது.

அதையேற்று கர்நாடக அரசு நிலம் ஆக்கிரமிப்பு தடை சட்டம்-2011 கொண்டுவந்து மாநில அரசு உத்தரவிட்டதுடன் பேரவை மற்றும் மேலவையில் மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது. இதனிடையில் அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்யகோரி 200க்கும் மேற்பட்டவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு நீதிபதிகள் அரவிந்தகுமார் மற்றும் பி.டி.பாட்டீல் ஆகியோர் அமர்வு முன் விசாரணை நடந்தது. கடந்த வாரம் விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதிகள் ஜன 20ம் தேதி ஒத்தி வைத்தனர்.

அதன்படி இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கினர். இதில் அரசுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதில் எந்த தவறுமில்லை. இது நியாயமானது என்பதால், சட்டத்தை ரத்து செய்யகோரி தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். அதே சமயத்தில் நில ஆக்கிரமிப்பு வழக்குகளை விசாரணை நடத்தும் நீதிமன்றம் பெங்களூருவில் மட்டும் இருப்பதால், தூரத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து வழக்கு தொடர்பாக வருவோருக்கு சிரமம் ஏற்படும் என்பதால், மண்டல வாரியாக சிறப்பு நீதிமன்றம் அமைப்பதுடன் அரசு வக்கீல்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு சிபாரிசு செய்தனர்.

Related Stories: