தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது: முதல்வர் எடப்பாடி பேச்சு

சென்னை: தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு 443 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், 150 மாணவர்கள் பல் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து  படிப்பார்கள் என முதல்வர் எடப்பாடி கூறினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது: அகில இந்திய அளவில், உயர்கல்வி படிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை 100க்கு 49 பேர் என்று தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஒரே வருடத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு 443 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். 150 மாணவர்கள் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். தைப் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அத்துடன் முழு கரும்பு மற்றும் பொங்கல் தொகுப்பும் வழங்கியது.

கொரோனா காலத்தில் இரண்டு முறை 1000 ரூபாய் மற்றும் பொங்கல் திருநாளுக்காக 2500 ரூபாய் என ஒரே ஆண்டில் மொத்தம் 4500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்த காரணத்தினால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் மக்களுக்கு அரசின் நிதியுதவி போதாது என்று நான் கேள்விப்பட்டவுடன் இரண்டரை லட்சம் வீடுகளுக்கு தலா 70,000 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்காக 1,804 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல உழைக்கும் திறனற்ற  5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்தேன்.  அதில் 90 சதவிகிதம் கொடுத்திருக்கிறோம். 2.84 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் கொடுத்திருக்கிறோம். மீதமுள்ளவர்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் கொடுத்து முடித்து விடுவோம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் 2 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததை உயர்த்தி, தற்போது 5 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று செயல்படுத்தி வருகிறது. நெசவாளர்களுக்கு 150 கோடி ரூபாய் மானியம் கொடுத்தோம். இந்த ஆண்டு அதனை உயர்த்தி 300 கோடி ரூபாய் மானியம் கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் தேரடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ‘தமிழகத்தில் சாதி சண்டையோ, மதச் சண்டையோ கிடையாது. அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடிய அரசு, அதிமுக அரசு. தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. இந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். பல ஆண்டுகளாக ஏரிகள் தூர்வாரப்படாமல் இருந்தது. ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, மழைக்காலங்களிலே ஒரு சொட்டு நீரைக் கூட வீணாக்காமல் நாங்கள் தேக்கி வைத்திருக்கிறோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வேளாண் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் கிருஷி கர்மான் விருதினை தொடர்ந்து பெற்று வருகிறது. 2019ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். அதில் 304 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. அந்தப் பணிகள் எல்லாம் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

அதன் மூலம் 5.50 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். நேற்றைய தினம் பிரதமரை சந்திக்கும் போது கூட, மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்கள் மற்றும் மானாவரி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க போதுமான நிதியினை ஒதுக்கிட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளேன்’ என பேசினார். தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘ஓடைகள், நதிகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி, பொழிகின்ற மழைநீர் முழுவதும் தேக்கி வைக்கப்பட்டு, விவசாயத்திற்கும் மக்களுக்கும் தேவையான நீர் கிடைக்கிறது. இதற்கும், 2019-20ம் ஆண்டிற்கான தேசிய விருதை பெற்றுள்ளோம். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவி உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலை அரசின் நிர்வாகத் திறமையின் காரணமாக சரியான முறையில் கையாண்டதன் விளைவாக நோய் பரவல் தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது’ என பேசினார்.

Related Stories: