40 மீ. மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளதால் சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை.. விழுப்புரம் - நாகை சாலை திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி : சுற்றுசூழல் முன் அனுமதி பெறாததால் விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. . விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலும், முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் 25 கிராம நிலங்கள் கையகப்படுத்த தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 62 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் முறையான அனுமதி பெறும் வரை, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த கூடாது என நெடுஞ்சாலை துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான எந்த அரசாணையையும் ரத்து செய்யவில்லை என தெரிவித்த நீதிபதிகள், முறையான அனுமதி பெறும் பட்சத்தில் திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் தெளிவுபடுத்தினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், நேற்று உயர்நீதிமன்ற உத்தரவை நீக்கி தீர்ப்பளித்தது. சாலை விரிவாக்க பணிகளுக்கு 40மீ. க்கு மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளதால் சுற்றுசூழல் முன் அனுமதி பெற தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தேவையான அளவிற்கு மரக்கன்றுகளை நட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: