கான்டூர் கால்வாயில் பாறை சரிந்து விழுந்தது-திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் நிறுத்தம்:சீரமைப்பு பணி தீவிரம்

உடுமலை : கான்டூர் கால்வாயில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் திருமூர்த்தி  அணைக்கு சென்று கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ளது திருமூர்த்தி அணை. வால்பாறையில் உள்ள சோலையாறு அணைதான் பிஏபி தொகுப்பு அணைகளின் தாய் என அழைக்கப்படுகிறது. இங்கிருந்து பரம்பிக்குளம், பெருவாரிபள்ளம், தூணக்கடவு அணைகள் வழியாக சர்க்கார்பதி மின்நிலையத்துக்கு செல்லும் தண்ணீர், காண்டூர் கால்வாய் வழியாக 45 கி.மீ. பயணித்து திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.

இதுதவிர, மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி வழியாக திருமூர்த்தி அணைக்கு வரும். 3ம் மண்டல பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த 11ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சர்க்கார்பதியில் இருந்து கடந்த 1ம் தேதி முதல் கான்டூர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு, அணைக்கு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், அணையில் இருந்து 33 கி.மீ. தொலைவில் உள்ள நல்லாறு ஷட்டர் அருகே நேற்று முன்தினம் இரவு ராட்சத பாறை உருண்டு கான்டூர் கால்வாய்க்குள் விழுந்தது. இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டது. இத்தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர் உடனடியாக கான்டூர் கால்வாயில் தண்ணீரை நிறுத்தினர். மீட்பு பணிகள் உடனடியாக துவங்கியது. பாறையை உடைத்து அகற்றும்பணி மும்முரமாக நடந்தது. 2 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாறையை அகற்றியவுடன் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: