கனமழையால் குண்டும் குழியுமான விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை

*விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை கனமழையால் குண்டும் குழியுமானதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலமாக பெய்து வந்த கனமழையால் விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையில் அரிப்பு ஏற்பட்டு பல இடங்களில் குண்டும் குழியுமாக ஆனது. இச்சாலையில் தினந்தோறும் 500க்கும் மேற்ப்பட்ட பேருந்துகளும், கார்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சாலை மிகவும் சேதமானதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியிலிருந்து துவங்கி உடையூர் கிராமப் பகுதி வரை சாலை சேதமாகியும், சிறு பாலம் கட்டும் பணிகள் குறுக்கு ரோடு பகுதி, மிராளூர், மஞ்சக்கொல்லை, உடையூர், வாண்டையாங்குப்பம் பகுதி வரை 6க்கும் மேற்ப்பட்ட இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒப்பந்தம் 2018ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை பணி முழுமை பெறாமல் காலதாமதப்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்களும், பேருந்து பயணிகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சாலைப் பணிகளையும் சிறு பாலம் கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: