தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையா?: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு.!!!

டெல்லி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். சென்னையில் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். பின்னர் ஓட்டலில் நடந்த சந்திப்பின் போது 60 தொகுதிகள் வேண்டும் என்று அமித்ஷா கண்டிப்புடன் கேட்டதாகவும்  அதற்கு 34 தொகுதிகள் மட்டுமே தர சம்மதித்தாகவும் கூறப்படுகிறது.

மேலும், 34 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலை தங்களிடம் கொடுக்க வேண்டும். மாநில உளவுத்துறை மற்றும் தன்னிடம் உள்ள ஒரு சிறப்பு டீம் மூலம் அவர்களை ஆய்வு செய்து பின்னர் பட்டியல் வெளியிடலாம் என்று  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக இன்று காலை 11.55 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு  சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், இரண்டு செயலாளர்கள் சென்றனர். டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதியம் 2.50  மணிக்கு தமிழ்நாடு இல்லம் சென்றார்.

தொடர்ந்து, அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த முதல்வர் பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசி வருகிறார். இன்று அமித்ஷாவுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் 60 தொகுதிகளை விட்டுக் கொடுத்து விட்டு  வருவாரா அல்லது அமித்ஷாவை சமாதானப்படுத்தி 34 சீட்டுகளை மட்டும் கொடுப்பாரா என்று இன்று இரவு நடக்கும் பேச்சுவார்த்தையின்போது உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு:

அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பிறகு முதல்வர் பழனிச்சாமி தமிழ்நாடு இல்லம் திரும்புகிறார். நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள், நதிநீர் இணைப்பு திட்டம்,  ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்குவது உள்ளிட்டவற்றை கோரிக்கையாக வைக்கவும் முதல்வர் பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் வண்ணராப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு  திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டம்,

பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம், நெய்வேலி என்எல்சி சூர்ய மின்சக்தி திட்டம் ராமநாதபுரம், தூத்துக்குடி காஸ் குழாய் திட்டம் ஆகிய 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமரை அவர் கேட்டுக் கொள்வார் என கூறப்படுகிறது. பின்னர்,  டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு 8.50 மணிக்கு சென்னை திரும்புகிறார். முதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: