ஆவுடையார்கோவில் அருகே ஏரியின் மடையில் உடைப்பால் 75 ஏக்கர் பயிர் பாதிப்பு: இணைப்பு சாலை துண்டிப்பு

அறந்தாங்கி: ஆவுடையார்கோவில் அருகே ஏரியின் மடையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுமார் 75 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள பெரும்பாலான பாசன ஏரிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டின. ஏரிகளில் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், ஏரியின் உபரி நீர் போக்கி வழியாகவே வெளியேறி வருகிறது. இந்நிலையில் கதிராமங்கலம், நல்லிக்குடி, சடையாமங்கலம் ஆகிய 3 ஏரிகளின் உபரிநீரும் உபரி நீர் போக்கி வழியாக கடந்த சில நாட்களாக வெளியேறி வருகிறது. இந்த ஏரிகளில் இருந்து வெளியேறி வரும் உபரிநீர் ஆலமங்களம் கண்மாயில் பாய்ந்து வருகிறது.

இதனால் ஆலமங்களம் கண்மாயில் அதிக அளவு தண்ணீர் நிரம்பியதால், அந்த கண்மாயில் உள்ள பழைமையான தண்ணீர் பாசன மடையில் ஓட்டை ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி வருகிறது.இதனால் கதிராமங்கலத்தில் இருந்து பில்லுக்குடி செல்லும் இணைப்பு சாலையில் கட்டப்பட்டிருந்த சிறுபாலத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி கதிராமங்கலம், ஆலமங்களம் ஏரி பாசனப் பகுதியில் சுமார் 75 ஏக்கருக்கும் மேற்பட்ட சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பாய்ந்துள்ளது. தண்ணீர் பாய்ந்ததால், 75 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: