முனியாண்டி கோயில் திருவிழா :100 கிடாய்கள் வெட்டி அன்னதானம்

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள எஸ்.கோபாலபுரம் முனியாண்டி சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் அன்று புகழ்பெற்ற அசைவ அன்னதான திருவிழா நடைபெறுவது வழக்கம். மாநிலம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் வைத்துள்ளவர்கள் ஒன்று கூடும் இந்த விழாவில் அசைவ உணவு பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

மாட்டு பொங்கலையொட்டி இந்த திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் நடத்தும் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நேற்று காலை கிராம பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்தனர். முனியாண்டி சுவாமிக்கு குடம்குடமாக பாலாபிஷேகம் நடந்தது.

மாலையில் நூற்றுக்கணக்கானோர் பூ, பழம், தேங்காய் அடங்கிய மலர் தட்டுகளுடன் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவிழாவையொட்டி நூறு ஆடுகள், 50 சேவல்கள் வெட்டப்பட்டு, நூறு மூட்டை அரிசியில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது.

திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுடசுட அசைவு உணவு பரிமாறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், ‘முனியாண்டி சுவாமி பொங்கல் விழாவையொட்டி எங்கள் கடைகளுக்கு இரண்டு தினங்கள் விடுமுறை விட்டு குடும்பத்துடன் திருவிழாவில் கலந்து கொள்வோம். நேர்த்தி கடனாக செலுத்திய கிடாய், சேவல்களை பலியிட்டு அசைவ உணவு தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறோம். ஒவ்வொரு நாளும் ஓட்டலின் முதல் வருவாயை உண்டியலில் சேமித்து வைத்து அந்த பணத்தை திருவிழாவில் பயன்படுத்துவது வழக்கம். இதே போல் இந்தாண்டு இந்த திருவிழா நடைபெற்றது’ என்றனர்.

Related Stories: