4வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கு நெல்லை, தூத்துக்குடியில் மிதக்கும் குடியிருப்புகள்: தண்ணீரை வெளியேற்ற கோரி 4 இடங்களில் சாலைமறியல்

வி.கே.புரம்: தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடாது மழை கொட்டித் தீர்க்கிறது. ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத வகையில் அடைமழையாக பெய்வதால் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரிநீர் தாமிரபரணியில் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 12ம் தேதி முதல் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. சேரன்மகாதேவி, சுத்தமல்லி உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கதிர் பிடிக்கும் நிலையில் இருந்த வயல்களை வெள்ளம் சூழ்ந்ததால் நாற்றுகள் அழுகத் துவங்கியுள்ளன. கரையோர பகுதிகளும், தாழ்வான இடங்களிலும் வெள்ளம் இடுப்பளவிற்கு சூழ்ந்துள்ளது. உறைகிணறுகள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி தென்காசி, விருதுநகர் மாவட்ட பகுதிகளிலும் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியிலும் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 2500க்கும் மேற்பட்ட வீடுகள் தீவுகளாக மாறியுள்ளன. 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். மாவட்டத்தில் 241 வீடுகள் மழைக்கு முழுமையாகவும், பகுதி அளவிலும் இடிந்துள்ளன. நேற்று காலை திருச்செந்தூர் ரோட்டில் மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சப்-கலெக்டர் சிம்ரன் ஜித்சிங்கலோன், மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன் ஆகியோர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் அவர்களை முற்றுகையிட்டு தங்களது பகுதியை பார்வையிட்டு செல்லுமாறு கூறி மழைநீர் சூழ்ந்த பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். இதே போல் மேலும் 3 இடங்களில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் புன்னக்காயல் கிராமத்திலும் ஏராளமான வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 200 பேரை அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.  முக்காணி, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால், ராமேஸ்வரத்தில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

முக்கொம்பு கதவணை மதகின் சுமைதாங்கி தூண் இடிந்து விழுந்தது

திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி கதவணையின் 15வது ஷெட்டரின் சுமை தாங்கி கான்கிரீட் தூண் (5 டன் எடை கொண்டது) நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 1974ல் கான்கிரீட்டால் இந்த தூண்கள் அமைக்கப்பட்டன. பழுது பார்க்கும் போது உடைந்த தூண்கள் மாற்றப்படும். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 4 தூண்கள் இரும்பு தூண்களாக மாற்றப்பட்டுள்ளன. தற்போது உடைந்த சுமை தாங்கி தூணையும் இரும்பு தூணாக மாற்ற உள்ளோம். இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என்றார்.

Related Stories: