நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு: பல இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டமாக இருப்பதுடன், விட்டு விட்டு லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக அனைத்து பகுதிகளிலும் மழை பரவலாக காணப்படுகிறது. சில இடங்களில் கனமழை கொட்டுகிறது. நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை, இரவு வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. நெல்லை மாவட்டத்தில் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையும், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையும், 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையும் ஏற்கனவே நிரம்பி விட்டன.

இதன் காரணமாக 3 அணைகளில் இருந்து வரும் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி என விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி உபரி நீரும் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. பாபநாசம் கோயில் முன்புள்ள படித்துறை பிள்ளையார் கோயில், சுவாமி மண்டபம் ஆகியவற்றை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. அம்பை சிறிய ஆற்றுப் பாலம், மணிமுத்தாறு பாலம், நெல்லையில் கருப்பந்துறை - மேலநத்தம் பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்த நிலையில், கோயிலின் கோபுரம் மட்டுமே வெளியே தெரிந்தது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வாகனங்கள் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சேரன்மகாதேவியில் சில சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. கல்லிடைக்குறிச்சி அருகே காட்டுமன்னார் கோயில் கிராமத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். உறை கிணறுகள் மூழ்கின: தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறை கிணறுகள், குழாய்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 500 கிராமங்களில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு தொடர் மழையால் கிராமங்கள், நகரங்கள் தீவாக மாறியுள்ளன.

* குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை

குற்றாலத்தில் நேற்றும் பகல் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம் அருவி படிக்கட்டுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. வெள்ளப்பெருக்கை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இதை அறியாமல் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: