கர்நாடக மாநில பாஜ அரசின் 3வது கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடக்கிறது: இன்று அறிவிப்பதாக முதல்வர் எடியூரப்பா பேட்டி: 7 புதியவர்கள் யார்?

பெங்களூரு: கர்நாடக பாஜ அரசின் மூன்றாவது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு இன்று நடக்கிறது. புதியதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்து 18 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் அஷ்வத் நாராயண், லட்சுமண் சவதி, கோவிந்த காரஜோள் ஆகிய மூன்று பேர் துணைமுதல்வர்கள் உள்பட 23 பேர் அமைச்சர்கள் என மொத்தம் 27 பேர் உள்ளனர். இன்னும் 7 இடங்கள் நிரப்பாமல் காலியாகவுள்ளது. ஆட்சி அமைந்து 18 மாதங்கள் முடிந்தும் இன்னும் முழுமையாக அமைச்சரவை விஸ்தரிக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு மட்டுமில்லாமல் ஆளும் கட்சியில் உள்ளவர்களிடமும் அதிருப்தி ஏற்படுத்தியது. மூன்றாவது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு செய்தால், யார் யாரை சேர்த்து கொள்வது என்பதில் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், கட்சி மேலிடத்தின் ஒப்புதலுடன் நிரப்பி கொள்ள முடிவு செய்தார்.

இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இன்று பதவியேற்பு விழா: அமைச்சரவை விஸ்தரிக்க கட்சி மேலிடம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று பகல் 3.50 மணி முதல் 4.30 மணி வரை அமைச்சரவை விஸ்தரிப்பு நடத்த முதல்வர் எடியூரப்பா முடிவு செய்தார். பதவியேற்பு விழா நடத்த அனுமதி வழங்குவதுடன் பதவியேற்பு விழா நடத்தி கொடுக்கும்படி முதல்வர் அலுவலகம் மூலம் மாநில ஆளுநருக்கு நேற்று காலை அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் இசைவு தெரிவித்தார். அதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அலுவலக ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையில் அமைச்சரவை விஸ்தரிப்பு செய்ய நாள் மற்றும் நேரம் முடிவு செய்துள்ளதை செய்தியாளர்களிடம் உறுதி செய்த முதல்வர் எடியூரப்பா, அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

வெறும் காலியாக இருக்கும் 7 இடங்கள் மட்டும் நிரப்பப்படுமா? அல்லது அமைச்சரவையில் இருந்து சிலரை நீக்கிட்டு புனரமைப்பு செய்யப்படுமா? என்பது நாளை (இன்று) காலை தெரிவிப்பேன். கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங் இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு வருகிறார். அவருடன் ஆலோசனை நடத்தி தெரிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு: இதனிடையில் அமைச்சரவையில் இடம் பிடிக்க 25க்கும் மேற்பட்ட மூத்த பாஜ எம்எல்ஏக்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலவை உறுப்பினர்களான எம்டிபி நாகராஜ், ஆர்.சங்கர், பேரவை உறுப்பினர்களான முனிரத்னம், உமேஷ்கத்தி, சுனில்குமார், எஸ்.அங்கார ஆகிய 6 பேருக்கு வாய்ப்பு வழங்குவது உறுதியாக தெரிகிறது. பேரவை உறுப்பினர்கள் எம்.பி.ரேணுகாச்சார்யா, எம்.பி.குமாரசாமி, பூர்ணிமா சீனிவாஸ் மற்றும் மேலவை உறுப்பினர் சி.பி.யோகேஷ்வர் ஆகிய நான்கு பேரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் நாகேஷ் இன்று ராஜினாமா ? இதனிடையில் அமைச்சரவையில் இருந்து கலால்துறை அமைச்சர் எச்.நாகேஷை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் அவரை ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி முதல்வர் அலுவலகம் மூலம் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியது. இதை உறுதி செய்யும் வகையில் நேற்று காலை முதல் அமைச்சர் நாகேஷ் யாருடைய கண்ணிலும் சிக்காமல் ரகசிய இடத்தில் இருந்தார். அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனிடையில் இன்று காலை நாகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி ஆளுநரிடம் முதல்வர் கடிதம் கொடுப்பார் என்று தெரியவருகிறது.

Related Stories: