பாதங்களை பதம் பார்க்கும் கற்கள்: பழநி பாதயாத்திரை பக்தர்கள் அவதி

பழநி: பழநி-திண்டுக்கல் சாலையில் கற்கள் கிடப்பதால் பாதயாத்திரை பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. எனினும், தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை விடுமுறை காலத்தில் கூடுதலான பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் முக்கிய வழித்தடமாக பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விளங்குகிறது. பக்தர்கள் நடந்து வர ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் பிரத்யேக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நடைமேடை அந்தந்த ஊராட்சிகளின் 100 நாள் வேலைதிட்ட பயனாளிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விருப்பாட்சி மேடு பகுதியில் ஏராளமான  ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. நெடுந்தொலைவில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் இதில் நடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுதவிர, ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி வரை உள்ள தங்குமிடங்கள் உள்ளனவே தவிர, கழிவறை வசதி போதிய அளவில் இல்லை. தனியார் கழிவறைகள் மட்டுமே உள்ளன. இவைகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 எனவே, பாதயாத்திரை வழித்தடங்களில் தற்காலிக கழிவறை அமைக்க வேண்டும். ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நடமாடும் கழிவறை வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் சுத்தம் செய்து சீரமைக்க வேண்டுஎன பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: