ஓசூர் அருகே முகாம்; ராகி பயிரை துவம்சம் செய்த யானைகள்: விரட்டியடிக்க விவசாயிகள் கோரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் புகுந்த யானை கூட்டம் ராகி, நெல், வெண்டை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் 4 பிரிவுகளாக பிரிந்து ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. நாயக்கானப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, சானமாவு, ராமாபுரம் ஆகிய பகுதிகளில் ராகி, நெல், வெண்டை, கோஸ் பயிரிட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள் பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன.

இதனால், விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `கடந்த சில நாட்களாக சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் 4 குழுக்களாக பிரிந்து இரவு நேரங்களில் விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்றனர். தொடர்ந்து 4 பிரிவுகளாக சுற்றித்திரியும் யானைகளை ஒன்றாக இணைத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: