பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் உபரி நீர் திறப்பு; தாமிரபரணி ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்: குறுக்குத்துறை கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது

நெல்லை: பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 31ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை காலம் முடிவுக்கு வந்து விடும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய பின்பும் வழக்கத்திற்கு மாறாக மழை கொட்டி வருகிறது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் நிரம்பி விட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ேநற்றைய நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.15 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141.57 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் விநாடிக்கு 2 ஆயிரத்து 322 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2182 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் 18 மிமீ, சேர்வலாறு அணைப்பகுதியில் 12 மிமீ மழை பதிவாகியுள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 117.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2050 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 38 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைப்பகுதியில் 19 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி உபரிநீர் விநாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடனாநதி அணையில் இருந்து வரும் உபரிநீரும் விநாடிக்கு 448 கன அடி தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. தொடர்ந்து மழை காரணமாக காட்டாற்று பகுதிகளில் இருந்து வெள்ள நீரும் தாமிரபரணி ஆற்றில் பாய்கிறது.

இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. நெல்லை தைப்பூச மண்டபத்தை தழுவிக் கொண்டு வெள்ள நீர் செல்கிறது. தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் வெள்ளப் பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் ஆற்றுக்கு குளிக்கச் செல்ல வேண்டாம். ஆற்றுப் பகுதிக்கு சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது.

தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார். தொடர் வெள்ளப் பெருக்கு காரணமாக வருவாய் துறையினர், பொதுப்பணித் துறையினர் 24 மணி நேரமும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குளங்களை பொதுப்பணித் துறையினர், வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நெல்லையில் 40 மிமீ பதிவு

நெல்லையில் நேற்று காலை முழுவதும் நல்ல மழை பெய்தது. பகல் நேரங்களில் சற்று இடைவெளி இருந்த நிலையில் மாலை முதல் மீண்டும் மழை வெளுத்து கட்டியது. இதனால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அம்பையில் 14.50, சேரன்மகாதேவியில் 24.60, நாங்குநேரியில் 19.50, பாளையங்கோட்டையில் 20, ராதாபுரத்தில் 15, நெல்லையில் 40 மிமீ மழை பதிவானது.

Related Stories: