அவனியாபுரத்தில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு விழாவில் முதல்மரியாதை, பேனருக்கு தடை

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் முதல்மரியாதை வழங்குவது, பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன், ஐகோர்ட் மதுரை  கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவராக 10 ஆண்டுகளாக ஒருவரே இருக்கிறார். முறையான கணக்குகள் இல்லை. மற்றவர்களுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.  பட்டியலின சமூகத்தினருக்கு குழுவில் வாய்ப்பில்லை. எனவே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பை ரத்து செய்து, விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள்  எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதேபோல் சுந்தர் என்பவரும் மனு செய்திருந்தார். வக்கீல் கண்ணன் ஆஜராகி, ‘‘கடந்தாண்டைப் போல, முதல் மரியாதை வழங்குவது, ஜாதி மற்றும் அரசியல்  ப்ளக்ஸ் பேனர்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு வரவு-செலவுக்கு முறையான கணக்கு பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர்கள் இருவரையும் ஜல்லிக்கட்டு குழுவில் சேர்க்கவேண்டும். ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்’’ எனக்கூறி மனுக்களை முடித்து  வைத்தனர். இதனிடையே, பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழு தொடர்பாக சந்தானம் என்பவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கடைசி நேரத்தில் வந்துள்ளதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலவில்லை எனக்கூறி தள்ளுபடி  செய்தனர்.

3 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு 2,577 காளைகள் பதிவு: கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி:

மதுரை மாவட்டத்தில் ஜன. 14ல் அவனியாபுரம், ஜன. 15ல் பாலமேடு, ஜன. 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக 3 இடங்களிலும் நேற்று காளைகள் பதிவு நடந்தது. அலங்காநல்லூரில் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள்,  50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது காளைகளை ஜல்லிக்கட்டில் களமிறக்க டோக்கன் பெற்றனர். கூட்டம் அதிகமானதால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை  கட்டுப்படுத்தி, வரிசையில் நின்று டோக்கன் பெற அனுமதித்தனர். பாலமேட்டில் முன்பதிவு செய்த 474 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு ெகாரோனா பரிசோதனைக்கு கூட்டம்  திரண்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். மதுரை மாவட்டத்தின் 3 இடங்களிலும் நேற்று மட்டும் 2,577 காளைகள் பதிவானது.

Related Stories: