பிரிவு உபசார விழா முடிந்து ஓய்வு பெற்ற 2 பேருக்கு பல்கலை துணைவேந்தர் பதவியை நீட்டிப்பதா? திமுக கண்டனம்

சென்னை: “பதவிக்காலமும் நிறைவுற்று, பிரிவு உபசார விழாவும் நடத்தப்பட்டு-பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு 2 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள் பதவியை நீட்டிப்பதா?” என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி வெளியிட்ட அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இருவரின் பதவிக்காலமும் நிறைவுற்று-பிரிவு உபசார விழாவும் நடத்தப்பட்டு-பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது அவசியமற்றது. வெளிப்படையான தேர்வு முறைக்கு “விடை” கொடுக்கும் மிக மோசமான செயலாகும்.

புதிய துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய “தேர்வுக்குழு” அமைக்கப்பட்ட பிறகு- துணை வேந்தர்களுக்கு ஏன் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? அதிமுக அரசின் சார்பில் அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டதா? தமிழக ஆளுநர் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்தாரா? என்பதெல்லாம் கேள்விக் கணைகளாக அணிவகுத்து நிற்கின்றன. உயர் கல்வியின் தரத்தைத் தாழ்த்தி- தமிழக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினை வீழ்ச்சிப் பாதையில் தள்ளும் என்று தெரிந்தே வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் இது மாதிரிச் செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் பணி நீட்டிப்பு உத்தரவினை வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட வேறு எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் துணை வேந்தர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கும் முயற்சியில் வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் ஈடுபட வேண்டாம் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: