தடைக்கு பின்னரும் தொடரும் உயிரிழப்புகள்!: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை..!!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பாக கிடைத்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த இளைஞர், தாய் கண்டிப்பார் என பயந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை அரசு தடை செய்துள்ளது. தடையை மீறி ரம்மி விளையாடி பணத்தை இழப்பதால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த 20 வயது இளைஞர் தமிழ்ச்செல்வன், வீட்டில் உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.

இதை பார்த்து அவரது பாட்டி சத்தமிட அக்கம்பக்கத்தினர் முயன்றும் தமிழ்ச்செல்வனை கிணற்றில் இருந்து மீட்க முடியவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தமிழ்ச்செல்வனின் சடலத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த தமிழ்ச்செல்வன், ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பை நேற்று வாங்கி வந்தவர், 500 ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு எஞ்சியப்பணம் காணாமல் போய்விட்டதாக தந்தையிடம் கூறியிருக்கிறார். இந்த விஷயம் தாயாருக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் தமிழ்ச்செல்வன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தேசிய அளவில் தடை விதிக்க பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த வாரம் கோவையை சேர்ந்த வாடகை கார்  ஓட்டுனர் திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: