25 நிமிடங்களில் 247 படிக்கட்டுகளை கைகளை ஊன்றி தலைகீழாக இறங்கிய கூலித் தொழிலாளர்-கைதட்டி காட்டழகர் கோயில் பக்தர்கள் உற்சாகம்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே உள்ள காட்டழகர் கோயிலில் 247 படிக்கட்டுகளில் கைகளை ஊன்றி, தலைகீழாக  25 நிமிடத்தில் தொழிலாளி இறங்கி சாதனை படைத்தார்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் வனப்பகுதிக்குள் காட்டழகர் கோயில் உள்ளது. இந்த கோயிலைச் சுற்றியுள்ள மலைப்பகுதியில் கரடி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.

ஆனாலும் இக்கோயிலில் உள்ள காட்டழகர் என்ற சுந்தரராஜப் பெருமாளையும், சுந்தரவல்லி, சௌந்தரவல்லி தாயாரையும் தரிசிக்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் குடும்பத்துடன் வருகின்றனர். இக்கோயிலுக்கு திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வகுமார் (45) ஒவ்வொரு வாரமும் வருகிறார். கோயிலுக்கு தனது குடும்பத்துடன் நேற்று வந்த செல்வகுமார், உற்சாக மிகுதியால் மலையில் இருந்து அடிவாரம் வரை 247 படிக்கட்டுக்களையும் சுமார் 25 நிமிடங்களில் தலைகீழாக கைகளை ஊன்றி இறங்கினார்.

 கோயிலுக்கு வந்த பக்தர்கள் அவரது சாதனையைக் கண்டு, கைதட்டி உற்சாகப்படுத்தினர். காட்டழகர் கோயில் படிக்கட்டுக்கள் 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.செல்வகுமார் கூறுகையில், `‘சிறுவயதிலிருந்தே கோயிலுக்குச் செல்லும்போது படியில் கைகளை ஊன்றி தலைகீழாக இறங்குவது வழக்கம். அப்படித்தான் நேற்றும் இறங்கினேன். இதற்கு முன் திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னதி படிக்கட்டுகளிலும் கைகளை ஊன்றி தலைகீழாக இறங்கியுள்ளேன். இப்படி செய்வதன் மூலம் மனவலிமை அதிகரிக்கிறது’’ என்றார்.

Related Stories: