6 மாநிலங்களில் ஏற்கனவே பரவிய நிலையில் உபி.யிலும் பறவைக்காய்ச்சல்: டெல்லி, மகாராஷ்டிராவிலும் அறிகுறி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பறவைக்காய்ச்சல் பரவிய மாநிலங்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. புலம்பெயர் பறவைகள் மூலமாக நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1,200 பறவைகள் இறந்துள்ளன. கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல், அரியானா மற்றும் குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும், உத்தரப்பிரதேசத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கான்பூர் மற்றும் பிரதாப்கர் உயிரியல் பூங்காக்களில் மர்மமாக இறந்த பறவைகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் பறவைக்காய்ச்சலால் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பறவைக்காய்ச்சல் பரவிய மாநிலங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதே போல, மகாராஷ்டிராவில் கோழிப் பண்ணை ஒன்றில் 900 கோழிகள் இறந்துள்ளன. டெல்லியிலும் மர்மமான முறையில் பறவைகள் இறந்துள்ளன. அவைகளின் மாதிரிகளும்  ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

சட்டீஸ்கரில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் பறவைக்காய்ச்சல் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நோய் பரவிய மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், மத்திய குழுவினர் கேரளா மற்றும் இமாச்சலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். பறவைக் காய்ச்சல் குறித்த வதந்தி பரவுவதை தடுக்கவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

* மிருகக்காட்சி சாலைகள் தினம் அறிக்கை தரணும்

நாடு முழுவதும் மிருகக்காட்சி சாலையில் பறவைக் காய்ச்சல் பரவிவிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மிருகக்காட்சி சாலைகள் நிர்வாகத்திற்கு மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், பறவைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், புலம்பெயர் பறவைகள் வரும் பாதைகள் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும், தேசிய மற்றும் சர்வதேச பறவைகள் பரிமாற்ற நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மிருகக்காட்சி சாலையில் உள்ள பறவைகள், அவைகளுக்கு ஏதேனும் பாதிப்புள்ளதா, அறிகுறிகள் தென்பட்டால் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதா, எந்த ஆய்வகத்திற்கு மாதிரி அனுப்பப்பட்டுள்ளது என்ற அறிக்கையை தினசரி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: