யாழ்ப்பாண பல்கலை.யில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இரவோடு இரவாக தரைமட்டம்: இலங்கையில் பதற்றம்

கொழும்பு: இலங்கை இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூபி, நேற்று முன்தினம் இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போர், முள்ளிவாய்க்காலில் முடிந்தது. இதில், மாணவர்கள் உட்பட ஏராளமானவர்களை ராணுவம் கொன்று குவித்தது. அவர்களின் நினைவாக, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில், ‘முள்ளிவாய்க்கால் நினைவு தூபி’ அமைக்கப்பட்டது. இது நேற்று முன்தினம் இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு தமிழர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்செயலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் மாணவர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை வெளியில் கொண்டு செல்வதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், அப்பகுதியில் ராணுவமும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், யாழ்ப்பாணத்திலும், தமிழர்கள் வசிக்கக் கூடிய மற்ற பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது.

ராணுவ தளபதி மறுப்பு

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகையில், ‘‘யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதற்கும் ராணுவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராணுவம் மீதான குற்றச்சாட்டு தவறானது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் உள்விவகாரங்களில் ராணுவம் என்றும் தலையிடாது,’’ என்றார்.

Related Stories: