வள்ளியூர் பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் `சிறப்பு’: விவசாயிகள் மகிழ்ச்சி

வள்ளியூர்: வள்ளியூரில் பரவலமாக மழை பெய்ததால் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் தென்கொடி பகுதியான வள்ளியூர், தெற்குவள்ளியூர், கலந்தபனை, ராஜாபுதூர், சண்முகபுரம், குளத்துகுடியிருப்பு, பனங்காட்டுர் ஆகிய பகுதிகளில் பனைமரங்கள் அதிகளவு உள்ளன. இதன் காரணமாக இந்த ஊர்களின் பெயர்களோடு பனை சம்பந்தமான பெயர்களும் இணைந்து இருக்கும். கற்பகத்தரு எனப்படும் பனைமரங்களை ஆதாராமாக கொண்டே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் இருந்து வந்துள்ளது. இப்பகுதியிகளில் விளைவிக்கப்படும் பனங்கிழங்குகள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளட்ட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி வந்தன.

இருப்பினும் பனை சார்ந்த தொழில்கள் தற்போது நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகிறது. போதிய வருமானம் இல்லாததால் பனை தொழிலாளர்கள் பலர் மாற்று தொழிலுக்கு மாறிவிட்டார்கள். இதனால் பதனீர் இறக்குதல், கருப்பட்டி தயாரித்தல், பனைவெல்லம் தாயரிக்கும் தொழில் முற்றிலும் நலிவடைந்த நிலையில் உள்ளது. பனை மரங்களும் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகிறது. இதனால் பனங்கிழங்கு உற்பத்தி சமீப வருடங்களாக குறைந்தது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காராணமாக பனையிலிருந்து நுங்கு வெட்டப்படாததால் அதிகளவில் விவசாயிகள் பனங்கிழங்குகளை பயிரிட்டிருந்தனர்.

இந்த ஆண்டு பருவமழை அதிகம் பெய்ததால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கலுக்கு தேவையான பனங்கிழங்கு தட்டுபாடின்றி அதிகளவு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதிகளவு விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பனங்கிழங்கு விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 25 எண்ணம் கிழங்குகள் கொண்ட கட்டு ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பனங்கிழங்கு விவசாயி குளத்துகுடியிருப்பு பால்துரை கூறினார்.

Related Stories: