முதுகுளத்தூர் பஜாரில் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு

சாயல்குடி,:  முதுகுளத்தூர் பஜாரில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பரமக்குடி, சாயல்குடி, ராமநாதபுரம் சாலையில் முதுகுளத்தூர் அமைந்துள்ளதால் போக்குவரத்து மிகுந்த நகராக விளங்கி வருகிறது. இச்சாலையில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்தீரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்று தற்போது திருச்செந்தூர், கன்னியாகுமரி, குற்றாலம், சபரிமலை செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இதனை போன்று மீன், கருவாடு, மரக்கரி, உப்பு உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வந்து செல்கிறது. முதுகுளத்தூரில் காலை, மாலை நேரங்களில் வழக்கமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் மாடுகளை அதன் உரிமையாளர்கள் கட்டிபோடுவதில்லை. இதனால் பஜார், பேருந்து நிலையம் போன்ற பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகிறது.

இதனால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் இருசக்கர வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தி வருவதாக கூறுகின்றனர். வாகனத்தின் ஒலி சத்தத்தை கேட்டு திடீர், திடீரென மாடுகள் மிரண்டு ஓடுவதாலும், சாலை, நடைபாதையில் சுற்றி திரிவதாலும் பெண்கள் அலறி ஓடும் நிலை உள்ளது. மேலும் வியாழக் கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. மாடுகளின் தொல்லையால் பெண்கள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல முடியாமல் அவதிப்படுவதாக புகார் கூறுகின்றனர்.பேரூராட்சி, காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினந்தோறும் கடும் சிரமங்களை அன்றாடம் சந்தித்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

Related Stories: