ஒட்டன்சத்திரம் அருகே 14ம் நூற்றாண்டு காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஒட்டன்சத்திரம்:  ஒட்டன்சத்திரம் அருகே 14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் கோபால், அப்பகுதியில் பழைய கல்வெட்டுகள் இருப்பதாக தெரிவித்ததன் பேரில், வரலாற்று ஆய்வாளர்கள் ஆசிரியர் அரிஸ்டாட்டில், முனைவர் லட்சுமணமூர்த்தி ஆகியோர் அக்கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஊரின் எல்லைப்பகுதியில், ஊரின் பெயருடன் நடப்பட்டுள்ள கல்வெட்டை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘இக்கல்வெட்டு 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதன் மூலம் கிராமத்தின் முந்தைய வரலாற்று பெயர் ‘திருவிடைவாய் பிழையான அழகிய பெருமாநல்லூர்’ என அறியப்படுகிறது. மேலும், இவ்வூர் பொங்கலூர் நாட்டைச் சேர்ந்த கீரனூர் அழகிய சொர்க்கப்பெருமாள் ஏற்படுத்திய கோயில் ஊர் எனவும் தெரிய வருகிறது. கல்வெட்டு மூலம் வாகரை கிராமத்தின் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பெயரை அறிய முடிகிறது’’ என்றனர்.

Related Stories: