ஜெயங்கொண்டம் பகுதியில் பலத்த மழையால் 4 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னேரி நிரம்பியது: கதவணைகளை பாதுகாக்க கோரிக்கை

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட சோழகங்கம் என்கிற பொன்னேரி நான்கு வருடங்களுக்குப் பின்னர் தற்போது நீர் நிரம்பி ததும்புகிறது நான்கு ஷட்டர்கள் மற்றும் 8கண் மதகுகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு மட்டும் 9 செமீ அளவில் மழை பெய்தது. கடந்த 8 நாட்களில் சுமார் 15 செமீ அளவில் மழை பெய்தது. இதனால் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழகங்கம் என்று கூறப்படும் பொன்னேரியில் நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது.பொன்னேரியானது 700 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 1374 ஏக்கர் அளவில் ஆயக்கட்டு பாசன வசதி பெற்று வருகின்றது. சுமார் 4,800மீ. நீளத்தை கொண்ட ஏரி. இந்த ஏரியால் குருவாலப்பர் கோவில் இடைக்கட்டு,கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை, ஆயுதக்களம், மண்மலை, மெய்க்காவல் புத்தூர் , வீரசோழபுரம் போன்ற ஊர்களிலுள்ள 1,374 ஏக்கர் வயல்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த பொன்னேரியில் தென்புறம் உள்ள நான்கு ஷட்டர்கள் வடபுறம் உள்ள அணைக்கட்டில் இதில் எட்டு கண் மதகுகள் கொண்டு உள்ளன. தற்போது முழுவதும் 5.2 மீட்டர் உயரத்தை எட்டி அணை மட்டம் ததும்பி உள்ளது.பொன்னேரியில் திறக்கப்படும் தண்ணீர் கங்கைகொண்ட சோழபுரம் மண்மலை மெய்க்காவல் புத்தூர் வழியாக வளரி சென்றடைந்து அங்கிருந்து அணைக்கரையில் இருந்து வரும் வடவாரில் கலந்து வீராணம் ஏரிக்கு சென்றடையும்.பொன்னேரியில் நிரம்பும் போது தண்ணீர் திறக்கப்பட்டால் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக தண்ணீர் திருகுகோல் உள்ளே விழுந்து விடும் அல்லது மதகில் ஷட்டர் திரும்பவும் கீழே இறங்காது. இது போல் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பழுது நடைபெற்று வருவதால் ஏரி கொள்ளளவை எட்டிய அனைத்து நீரும் வடிந்து வீணாக வீராணம் ஏரியில் கலந்து விடும். இப்படி இருப்பதால் விவசாயிகளுக்கு இரண்டு போகம் சாகுபடி செய்ய முடியாமல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். கடந்த வருடம் ஒரு முறை சாகுபடி செய்வதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. தற்போது அரியலூர் கலெக்டர் ஏரியை சுற்றி ஆய்வு செய்து தண்ணீரை பாதுகாக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories: