தலை கொடுக்காததால் சிப்பாய் புரட்சி தோல்வி தலைவர்களாகிய மக்கள் தலை கொடுக்க வேண்டும்: வேலூரில் கமல்ஹாசன் பேச்சு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குடியாத்தத்தில் திறந்த வேனில் கமல்ஹாசன் பேசியதாவது: குடியாத்தம் சட்டமன்ற தொகுதி காமராஜர் போட்டியிட்டு வென்ற தொகுதி. முடியாத மக்களுக்கு நல்லது கெட்டது நன்றாக தெரியும். ஆகவே மக்கள் நீதி மய்யத்தை குடியாத்தம் தொகுதி மக்கள் ஆதரிப்பார்கள். வரும் வழியில் திறந்தவெளி சாக்கடைகள் இருந்தது.  எப்போதும் நகரத்தின் மைய பகுதியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இப்போதும் சாக்கடை நீர் செல்கிறது. எங்கு பார்த்தாலும் நதிகளாக இருந்த ஆறுகளில், தற்போது கழிவு நீர் சாக்கடைகள், குப்பைகள் காணப்படுகிறது. இது வருத்தத்துக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கொட்டும் மழையில் கமல்ஹாசன் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அதேபோல் வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.  தொடர்ந்து வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: சிப்பாய் புரட்சி தோற்க காரணம் தலைவர்கள் தலை கொடுக்காததே. தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும். நான் என் தலையை தமிழகத்திற்கு வைத்துவிட்டேன். நீங்களும் வைத்தால் தான் தமிழகத்தை மீட்க முடியும். நீங்கள் எல்லோரும் தலைவர்கள். நான் பேசுவது தலைவர்களிடம் தான். அந்த தலைவர்கள் மக்களாகிய நீங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: