வேலூர் மாவட்டத்தில் ஊர், தேதி அறிவிப்பு; 43 இடங்களில் காளை விடும் விழா: கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 43 இடங்களில் காளை விடும் விழா நடத்தும் கிராமங்கள் மற்றும் தேதி விவரங்கள் கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து காளை விடும் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். எஸ்பி செல்வகுமார், டிஆர்ஓ பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், காளை விடும் விழா நடத்தும் குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைகள் காளை விடும் விழாக்குழுக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, விழாக்குழுக்கள் சார்பில் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதையடுத்து ஒவ்வொரு ஊரிலும் விழா நடத்தும் தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில், தங்களுக்கு ஏற்ற தேதிகளை மாற்றம் செய்து தர வேண்டும் என்று விழாக்குழுக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, தேதிகள் இறுதி செய்யப்பட்டு பட்டியல் அறிவிக்கப்பட்டது. பின்னர் விழா தொடர்பாக வழக்கமான வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், விழா காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும். காளைகளை அழைத்து வரும் உரிமையாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி, காளை விடும் விழா நடத்தப்படும் தேதிகள், ஊர்கள் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: வரும் 14ம்தேதி-அணைக்கட்டு, 15ம்தேதி-அத்தியூர், பனமடங்கி, 16ம்தேதி-சோழவரம், கீழ்முட்டுக்கூர், மூஞ்சூர்பட்டு. 17ம்தேதி-கீழ்அரசம்பட்டு, புதூர், வீரிசெட்டிப்பல்லி, 18ம்தேதி-சேர்பாடி, பாக்கம்பாளையம், இறைவன்காடு. 20ம்தேதி-பெரிய ஏரியூர்.

21ம்தேதி-மேல்மாயில், கீழ்கொத்தூர். 24ம்தேதி-கம்மவான்பேட்டை. 26ம்தேதி-கீழ்வல்லம், கரசமங்கலம், அரியூர். 27ம்தேதி ஆற்காட்டான்குடிசை. 28ம்தேதி-சின்னபாலம்பாக்கம். 29ம்தேதி-வண்டறந்தாங்கல். பிப்ரவரி 3ம்தேதி-பொய்கை, வேப்பங்கனேரி. 4ம்தேதி-கெங்கநல்லூர், சீலேரி, 5ம்தேதி செதுவாலை, நாகல், கம்மசமுத்திரம். 10ம்தேதி-சாத்துமதுரை, செங்குட்டை. 14ம்தேதி-பென்னாத்தூர், மேல்வல்லம், வக்கணம்பட்டி. 17ம்தேதி-பென்னாத்தூர். 20ம்தேதி-இபி காலனி. 21ம்தேதி-இலவம்பாடி. 22ம்தேதி-பள்ளிகொண்டா, அக்ராவரம். 24ம்தேதி-ராமாபுரம். 25ம்தேதி-காட்பாடி, ஆண்டிகொட்டாய். 26ம்தேதி- துத்திக்காடு.

Related Stories: