தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதி கரும்பு விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மறுப்பு

*அபராதத்துடன் கடன் செலுத்த வேண்டிய அவல நிலை

*குரலற்றவர்களின் குரல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பாலபந்தல், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள 174 கிராமங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு பயிர் செய்து வருகின்றனர். அதனை தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலையில் பதிவு செய்து கரும்புகளை பருவத்தில் அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி வைக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி மேற்கண்ட பகுதியில் இருந்து கடந்த 2018-19ம் ஆண்டில் கரும்பு பயிர் செய்த விவசாயிகள் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் முறைப்படி பதிவு செய்து ஆலை நிர்வாகம் பரிந்துரையின்படி அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்றனர்.  ஒரு ஏக்கர் கரும்பு பயிருக்கு முதல் நடவுக்கு ரூ. 50 ஆயிரமும், இரண்டாம் பயிர் அதாவது மறுதாம்பு கரும்பு பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.45 ஆயிரமும் வங்கியில் கடன் பெற்றனர். கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற கரும்பு விவசாயிகள் 15 மாதத்திற்குள் கடனை திருப்பி செலுத்திவிட்டால் வட்டி மானியத்தில் தள்ளுபடி செய்யப்படும்.

இதில் 15 மாதம் முடிந்து ஒரு நாள் கூடுதலாக ஆனாலும் 15 மாதத்திற்கும் சேர்த்து 14 சதவீதம் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என கூட்டுறவு வங்கி நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. குறைந்தபட்சம் சுமார் 2,3 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 20 ஏக்கர் கரும்பு பயிர் செய்தவர்களும் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.

அதாவது கரும்பு  பயிர் செய்த 2500 பேரில்  2000 பேர் சிறு, குறு விவசாயிகள், 500 பேர் பெரும் விவசாயிகள் ஆவர்.. கடந்த 2018-19ம் ஆண்டில் பதிவு செய்த கரும்புகளை தரணி சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பி வைத்த விவசாயிகளுக்கு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கரும்பு நிலுவை தொகை வழங்கப்படவில்லை. அந்த ஒரு ஆண்டில் மட்டும் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.25.70 கோடி நிலுவை தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு பணத்தை வழங்காததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கூட்டுறவு வங்கியில் மானியத்தில் கடன் பெற்ற விவசாயிகள் கடனை செலுத்த முடிய வில்லை. கூட்டுறவு வங்கி விதித்த நிபந்தனையான 15 மாதம் கடந்துவிட்டதால் அபராத வட்டியுடன் கடனை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பி அதற்கான தொகையை ஆலை நிர்வாகம் வழங்காததால் ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.  இதனால் தற்போது கரும்பு பயிர் செய்த விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவு  வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தரணி சர்க்கரை ஆலை கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாததால் இந்த ஆலையின் எல்லைக்கு உட்பட்ட கரும்பு விவசாயிகள் கரும்பு பதிவு செய்யமுடியாத பரிதாப நிலை ஏற்படுகிறது. ஆலையில் கரும்பு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆலை நிர்வாகம் பரிந்துரையின்படி கூட்டுறவு வங்கியில் கடன் பெற முடியும். கடந்த 2 ஆண்டுகளாக மேற்கண்ட கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யமுடியாததால் கடன் பெற முடியாமல் உள்ளனர். கூட்டுறவு வங்கியில் ஏற்கனவே மானியத்தில் கரும்பு பயிர் கடன் பெற்றவர்கள் கடனை குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி செலுத்த முடியாமல் கடன் காலாவதி (சிபில்) கணக்கில் உள்ளதால் மாற்று வங்கியிலும் விவசாயிகள் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும் அந்த கிராம பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தங்களது பெயரில் கடன் இல்லா சான்று வாங்கி வர மாற்று வங்கிகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் கூட்டுறவு வங்கியில் கடன் இல்லா சான்று பெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. தரணி சர்க்கரை ஆலை தற்போது மூடிய நிலையில் உள்ளதால் மேற்கண்ட கிராம பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் ஆலையில் பதிவு செய்ய முடியவில்லை. மேலும் கரும்பு பயிர் குறிப்பிட்ட நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாற்று சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்புவதற்கு வெட்டு ஆர்டர் கிடைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் கரும்பு வெட்டி ஆலைக்கு அனுப்ப முடியாத அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பதிவு செய்யப்படாத கரும்புகள் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றபோது இடைத்தரகர்கள் மூலம் ஆலைக்கு அனுப்பிவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் டன் ஒன்றுக்கு ரூ. 500 நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கரும்பு பயிரிடும் விவசாயிகள் நலன் கருதி கரும்பு பயிர்களை அருகில் உள்ள சர்க்கரை ஆலையில் பதிவு செய்து கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும்’

அனைத்து விவசாயிகள் முற்போக்கு சங்க தலைவர் ஷாயிம்ஷா கூறுகையில், தியாகதுருகம் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கரும்பு கடன் பெற்ற வகையில் அபராத வட்டியை ஆலை நிர்வாகம் செலுத்த வேண்டும்.

அல்லது அபராத வட்டியை அரசு ரத்து செய்து கூட்டுறவு வங்கியில் புதியதாக கரும்பு விவசாயிகள் கடன் பெற அரசு அனுமதிக்க வேண்டும். மக்கள் விருப்பத்திற்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு பயிர்களை பதிவு செய்ய சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: