போலி கால் சென்டருக்கு ‘சீல்’ விவகாரம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய ‘செல்போன்’ பார்சலில் ‘களிமண்’-விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

குடியாத்தம் : வேலூர், திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு கடந்த சில மாதங்களாக குறைந்த விலையில் செல்போன் விற்பனைக்கு உள்ளதாக அழைப்பு வந்தது. அதில், ‘உங்கள் போன் எண்ணுக்கு பரிசு விழுந்துள்ளது. நீங்கள் ₹2,500 கட்டினால், ₹10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் அனுப்பி வைப்போம்’ என்று பேசி உள்ளனர். இதை நம்பிய ஏராளமானோர் ஆன்லைனில் பணம் செலுத்தி குறிப்பிட்ட பொருட்கள் கிடைக்காமல் ஏமாந்துவிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் போட்டா சுப்பையா தெருவில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் முதல் தளத்தில் வாடகைக்கு இயங்கி வரும் போலி கால்சென்டரில் இருந்து அழைப்புகள் வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குடியாத்தம் தனிப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கம்ப்யூட்டர்கள், 100க்கும் மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அதன் உரிமையாளர் திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கிற வேலாயுதம்(33) என்பவரை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பான விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அழைப்பில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளனர். இதை நம்பியவர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் செல்போன் உள்ளிட்ட குறிப்பிட்ட பார்சல்களை அனுப்பி வைக்காமல், களிமண் பார்சல் அனுப்பி உள்ளனர்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பேசுவதற்கு, பணிபுரியும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற களிமண் பார்சல்களை அனுப்பி வைப்பதில் தனியார் கொரியர் சென்டர்கள் மற்றும் தபால் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. முழுமையான விசாரணைக்கு பிறகுதான் விவரங்கள் தெரியவரும்’ என்றனர்.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால் தற்போதுவரை போலி கால்சென்டர் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: