மணிமுத்தாறு அணை நிரம்புகிறது தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு-கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை : பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி விட்ட நிலையில் மழை தொடர்வதால் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து காரணமாக மணிமுத்தாறு அணை நிரம்பும் நிலையை எட்டி வருகிறது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நல்ல மழை கிடைப்பது வழக்கம். இதன் மூலம் முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும். கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை கிடைத்தது. இதன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் கடந்த டிசம்பர் முதல் வாரம் நிரம்பி விட்டன. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மட்டும் நிரம்பவில்லை.

வடகிழக்கு பருவமழைக் காலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முடிந்து விடும் என்பதால் டிசம்பர் இறுதியில் மழை குறைந்து விடும். ஜன.1ம் தேதி முதல் வெயிலும் பனிப்பொழிவும் இருக்கும். விவசாயிகள் பிசான நெல் சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொள்வர். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதம் தொடங்கிய பின்னரும் வடகிழக்கு பருவமழை நீடித்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி விட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

 நேற்றைய நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.55 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141.60 அடியாக உள்ளது. இரு அணைகளுக்கும் விநாடிக்கு 2 ஆயிரத்து 551 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 781 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையில் 32 மிமீ, சேர்வலாறு அணையில் 21 மிமீ மழை பதிவாகியுள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 114.35 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 455 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைப்பகுதியில் 34 மிமீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையின் பாதுகாப்பு கருதி 117 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படும். தற்போது அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளதால் இன்று அல்லது நாளை மணிமுத்தாறு அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி விட்ட நிலையில் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடனாநதி அணையில் இருந்து வரும் உபரி நீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ள நீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், தைப்பூச மண்டபம் ஆகியவற்றை வெள்ளம் சூழ்ந்தது.

மணிமுத்தாறு அணையும் நிரம்பி விட்டால் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் அதிகம் திறக்க வாய்ப்புள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் உஷார் நிலையில் இருக்குமாறு நெல்லை கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். வருவாய் துறையினரும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருவாய் துறையினர், பொதுப்பணித் துறையினர் வெள்ளத்தை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: