பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் ஏப்ரல் 30 ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய வடகிழக்குப் பருவமழை ஜனவரியிலும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள் பல நிரம்பியுள்ளன.

அனைத்து நீர் நிலைகளிலும் நீர் இருப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களில் உள்ள 90 நீர்த் தேக்கங்கள், அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆகும். தற்போது இவற்றில் 164 டிஎம்சி (73.40%) நீர் இருப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது; பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைபடை மதகுகள் பாசன பகுதியில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், நாளை முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இடைவெளிவிட்டு 12 டிஎம்சி க்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நாளை 7 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 2.5 டிஎம்சிக்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: