பறவை காய்ச்சல் பரவுவதால் முன்னெச்சரிக்கை: கேரள வாகனங்களுக்கு தடை: தமிழக எல்லையில் திருப்பி அனுப்பப்படுகின்றன

திருவனந்தபுரம்: கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கறிக்கோழி, வாத்து போன்ற பறவைகளுடன் வரும் வாகனங்கள், முட்டை வாகனங்கள் எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றன. கேரளாவில் கொரோ னா, ஷிகல்லா நோய்களை தொடர்ந்து பறவை காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. பறவை   காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க நோய் கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள வாத்துகள், கோழிகள் மற்றும்  அலங்காரப் பறவைகளை  கொல்லும் பணி தொடங்கியது. இதில், 35 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன.

ஏப்ரல் 2ம் தேதி வரும்  ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி  ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் தற்போதே வாத்து  குஞ்சுகள் இறைச்சிக்காக  வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை திடீரென  கொல்லப்படுவதால் பண்ணையாளர்கள்  கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், பறவை காய்ச்சல் மாநில பேரிடர் பட்டியலில்  சேர்க்கப்பட்டு உள்ளதாக  கேரள கால்நடை பாதுகாப்புத்துறை இயக்குநர் திலீப்  தெரிவித்துள்ளார். அவர்  கூறுகையில், ‘‘பறவை காய்ச்சல் பரவி வரும்  ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில்  கடும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்படும். இங்கு பறவை இறைச்சி, முட்டை  விற்பனைக்கு தடை விதிக்கப்படும்,’’ என்றார்.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், அதன் எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், புளியரை சோதனை சாவடி அருகே முகாமிட்டுள்ள தமிழக கால்நடை துறை அதிகாரிகள், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பறவையினங்கள், வாத்து, கறிக்கோழி, முட்டை, கோழித் தீவனங்கள் போன்றவற்றை ஏற்றிவரும் வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் பறவை காய்ச்சல் வைரஸ் ஒட்டிக்கொண்டு வரலாம் என்பதால் அங்கிருந்து குமரிக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. எல்லைப் பகுதியான படந்தாலுமூடு சோதனை சாவடிகளில் கால்நடைத் துறை அதிகாரிகள் முகாமிட்டு, இப்பணிகளை தீவிரமாக கண்காணிக்கின்றனர். காலியாக வரும் சரக்கு வாகனங்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.

கோவை: தமிழக-கேரளா எல்லையில் கோவை மாவட்டம் உள்ளதால், கேரளாவில் இருந்து கோவைக்குள் வரும் அனைத்து வழித்தடங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறுகையில், ‘‘இங்குள்ள அனைத்து கோழிப்பண்ணைகளுக்கும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அனைத்து மருந்துகளையும் தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன,’’ என்றார்.

Related Stories: