புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி...! வரும் காலங்களில் சுத்திகரிப்பு கோபுரம் அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அடிக்கல் நாட்ட அனுமதி அளித்த நிலையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டவும் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய விஸ்டா திட்டம் என்ற பெயரில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான பகுதிகளை மறுசீரமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தற்போது பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடமும் அடங்கும். இதில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்படவுள்ளது. அதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய தலைமைச் செயலகத்தை 2024-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், அடர்ந்த மரங்களுடன் பசுமையாக உள்ள நிலப்பகுதியை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் தேதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தது. எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் மட்டும் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதையடுத்து அந்த திட்டத்துக்கு டிசம்பா் 10-ஆம் தேதி பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தனர். புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அரசாணை செல்லும், அதை உறுதி படுத்துகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர், வரும் காலங்களில் சுத்திகரிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் என சுற்றுசூழல் அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: