மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மத்திய அமைச்சரிடம் நலம் விசாரித்த முதல்வர்

பெங்களூரு: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவை முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஷிவமொக்காவில் நடந்த பா.ஜ. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூட்டத்தை முடித்துக்கொண்டு சித்ரதுர்காவுக்கு வந்தார். அங்கு தனியார் ஓட்டலுக்கு செல்ல முயற்சித்த போது திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை உடனே  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சதானந்தகவுடாவை மாநில முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர்கள் கோவிந்தகார்ஜோள், லட்சுமண்சவதி, அஷ்வத்நாராயண், அமைச்சர்கள் எஸ்.டி.சோமசேகர், ராமுலு ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். அப்போது முதல்வர் எடியூரப்பா சதானந்தகவுடாவுக்கு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதால் அதிகமான டென்சன் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர் சதானந்தகவுடா டிவிட்டரில் கூறியதாவது, எனது உடல்நலம் நன்றாக உள்ளது. சர்க்கரை அளவு குறைந்ததால் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எக்கோ, ஈசிஜி அறிக்கையில் நன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் உடல் நலம் பெற விரும்பிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: