பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: ஆரணியில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் முன் அறிவிப்பின்றி அகற்றிய பொதுக்குடிநீர் குழாய்களை மீண்டும் அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் உள்ள சுப்பிரமணி நகரில் இருந்த பொதுக்குழாய்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அகற்றினர். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்னாள் கவுன்சிலர் கரிகாலன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

பின்னர், பேரூராட்சி அலுவலக அதிகாரியிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: ஆரணி பேரூராட்சியில் சுப்பிரமணி நகரில் இருந்த பொதுக்குழாய்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றிவிட்டனர். அதை மீண்டும் அமைக்க வேண்டும். இந்தியன் வங்கி அருகில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும். முலிகி தெரு, தோட்டகார தெரு போன்ற இடங்களில் எரியாத மின் விளக்கை மாற்றி அதை சீரமைக்க வேண்டும்.

ஆரணி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்கை வேண்டும். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 11ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திமுக பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், முன்னாள் செயலாளர் முத்து உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: