கோவாக்சின் தடுப்பூசி அரசியலாக்கப்படுகிறது; தடுப்பூசி தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்பதே எங்கள் நோக்கம்: பாரத் பயோடெக் எம்.டி கிருஷ்ணா

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி அரசியலாக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் எம்.டி. கிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கும் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் நேற்று அனுமதி அளித்தது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் நம்பகத்தன்மை குறித்து மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கான பரிசோதனை இன்னும் 3-வது கட்டத்தில் உள்ள நிலையில் எந்த அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என சர்வதேச பயோ எத்திகல் சங்கத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இந்தியாவின் 7 முக்கிய மருத்துவ நிபுணர்கள்ளும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி அரசியலாக்கப்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் எம்.டி.கிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கோவாக்சின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்திருப்பது இந்தியாவில் வைரஸ் தடுப்புசிகள் தொடர்பான மிகப்பெரிய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனது குடும்ப உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை. கோவாக்சின் தடுப்பு மருந்து இந்தியாவில் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. பிரிட்டன், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உள்பட 12 நாடுகளில் கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் என்பது இந்திய நிறுவனம் மட்டுமின்றி உலகளாவிய நிறுவனமாகும். கோவாக்சின் தொடர்பாக சர்வதேச அளவில் 70-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

தடுப்பூசி தேவைப்படும் உலகின் உள்ள அனைவருக்கும் இந்த தடுப்பூசியை கொண்டு சேர்பதே எங்கள் நோக்கம். கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரதச்சத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பானது என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: