திருப்பூரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொங்கல் பரிசு தொகுப்பை திருப்பிஅளித்த விவசாயிகள்

திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயிகள் தங்கள் பொங்கல் பரிசு தொகுப்பை திருப்பி கொடுத்துள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் தொடங்கப்பட்ட பொழுதே விடுபட்ட இரண்டு அணைகளான ஆணைமலையாறு நள்ளாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.

ஆனாலும் திட்டத்தை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திற்கு உட்பட்ட நிலங்கள் அனைத்து தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விவசாயமே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து இல்லாததால் விளை நிலங்கள் தற்போது வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டுவருகிறது. இதனை அடுத்து ஆனைமலை, நள்ளாறு திட்டத்தால் மட்டுமே இரண்டு மாவட்டத்தில் உள்ள மக்களை வாழவைக்க முடியும் என கருதி தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசு தற்போது வழங்கி வரும் பொங்கல் பரிசான குடும்ப அட்டைக்கு ரூ.2500 வெகுமதியை ஆணைமலையாறு நள்ளாறு திட்டத்தை செயல் படுத்துவதற்கான நிதியாக வழங்குவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க வந்தனர்.

அப்போது விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க காவல்த்துறையினர் மறுத்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்த்துறையினர் விவசாயிகளை உள்ளே அனுமத்தித்தனர். இதனை அடுத்து உள்ளே சென்ற  விவசாயிகள் பொங்கல் பரிசு பணத்தையும் கோரிக்கை மனுவையும் எடுத்து வைத்தனர்.

அதுமட்டுமின்றி உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற  8-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் உத்தரவு வரும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Related Stories: