டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதிய கெடுபிடி ஒரு வருட படிப்பும், உழைப்பும் ஒரு நிமிடம் தாமதத்தால் போச்சு-கலெக்டரின் காரை முற்றுகையிட்டதால் விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் :விருதுநகர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு காலையில் ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்கள் கலெக்டரின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வை எழுத 8,067 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக விருதுநகரை சுற்றி 28 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 4,108 பேர் மட்டும்  தேர்வெழுதினர். 3,959 பேர் ஆப்சென்ட் ஆகினர்.  விண்ணப்பித்தவர்களில் 49.08 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை.

காலை 10 மணிக்கு தேர்வு துவங்கியது. புதிய விதிமுறையால் தேர்வர்கள் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக மையத்திற்கு வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனவே தேர்வுமையங்கள் அனைத்தும் காலை 9.15 மணிக்கு திறக்கப்பட்டு 9.30 மணிக்கு மூடப்பட்டன. ஒரு நிமிடம் தாமதமாக, காலை 9.31 மணிக்கு தேர்வெழுத வந்தவர்களை கூட மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விருதுநகர் சூலக்கரையில் உள்ள கேவிஎஸ்  மெட்ரிக் பள்ளி தேர்வுமையத்தை  பார்வையிட காலை 10 மணிக்கு கலெக்டர் கண்ணன் வந்தார். அப்போது அனுமதிக்கப்படாமல் வெளியே நின்ற தேர்வர்கள், கலெக்டரின் காரை முற்றுகையிட்டனர்.

மழையால் பஸ் பிடித்து மையங்களை தேடி வருவதில் காலதாமதம் ஆகிவிட்டது. எங்களை   தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆனால் கலெக்டர்,  தன்னால் எதுவும் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.அங்கு வந்திருந்த தேர்வர்கள், ‘‘காலை 10  மணிக்குதான் தேர்வு துவங்குகிறது. மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளில்  இருந்து மழையில் மையங்களை தேடி கண்டுபிடித்து வருவதற்கு சிறிது காலதமதம்  ஆகிவிட்டது.

காலை 9.31 மணிக்கு வந்தவர்களை கூட தேர்வெழுத அனுமதிக்காதது  வருத்தமளிக்கிறது. ஆண்டுக்கணக்காக இரவு, பகல் பாராமல் படித்த படிப்பு வீணாகி விட்டது’’ என கண்ணீர் விட்டு அழுதனர்.

Related Stories: