18 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படை கெடுபிடி: குறைந்த மீன்களுடன் கரை திரும்பினர்

ராமேஸ்வரம்: வேலைநிறுத்தம் காரணமாக 18 நாட்கள் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படை கெடுபிடியால் குறைந்த மீன்களுடன் நேற்று கரை திரும்பினர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தை வாபஸ் பெற்றவர்கள், 18 நாட்களுக்குப்பின் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்று மாலை ஆழ்கடல் பகுதியில் மீனவர்கள் படகில் சென்றபோது இலங்கை கடற்படையினர் கப்பல்களில் ரோந்து வந்து, அந்தப்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

ஐந்துக்கும் மேற்பட்ட கன்போட் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை அந்தப்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இதனால் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இரவு முழுவதும் மீன்பிடித்து நேற்று கரை திரும்பினர். ராமேஸ்வரம் துறைமுகத்தை வந்தடைந்த படகுகளில் குறைந்தளவே மீன்கள் இருந்தது. சிறிய படகுகளிலும் வழக்கத்தைவிட குறைந்த அளவில் இறால் மீன்வரத்து இருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் கடலுக்கு சென்றும் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் இல்லாததால் ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: